Athanur Village

Welcome to Athanur Aura

"Celebrating Our village heritage, culture, and spiritual excellence"

அத்தனூர் கிராம இயற்கை எழில்

About Athanur

"அத்தன் என்றால் சிவன் — அத்தன் விரும்பிய ஊர் என்பதனால் அத்தனூர் என பெயர் பெற்றது."

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், அத்தனூர் கிராமம் — மணிமுத்தாறு பாயும் மங்கள நகரமாம் சேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

கிழக்கே போதி மலை மற்றும் கள்ளர்மலை, மேற்கே சிந்தாமணி மலை, வடக்கே சஞ்சீவிராயன் மலை, தெற்கே அலவாய்மலை என்னும் சிவன் மலை ஆகியவற்றை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில், எழில்மிகு சித்தர்மலைச் சாரலில் இக்கிராமம் அமைந்துள்ளது.

அத்தனூரில் முதன்மையான தொழில்களாக நெசவுத் தொழிலும் விவசாயமும் உள்ளது.

View Temple History
அருள்மிகு ஸ்ரீ அத்தனூர் அம்மன் திருக்கோயில்

அத்தனூர் திருக்கோயில்கள்

  • 1) அருள்மிகு அத்தனூர் அம்மன் கோவில்
  • 2) அருள்மிகு ஆதீஸ்வரி உடனமர் ஆதீஸ்வரர் திருக்கோயில்
  • 3) அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில்
  • 4) அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில்
  • 5) அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
  • 6) அருள்மிகு கொங்கண சித்தர் திருக்கோயில்
  • 7) சஞ்சீவிராய பெருமாள் திருக்கோயில்
View Gallery

அமைவிடம்

சேலம்–நாமக்கல் NH இல் 16 கி.மீ., இராசிபுரம் வட்டம்

முதன்மை தொழில்கள்

நெசவுத் தொழில் & விவசாயம்

சுற்றுப்புற மலைகள்

போதிமலை, கள்ளர்மலை, சிந்தாமணி, சஞ்சீவிராயன், அலவாய்மலை (சிவன்மலை)

அரசு வசதிகள்

பேரூராட்சி, ஆரம்ப சுகாதார நிலையம், தபால் நிலைய வசதிகள்

அருள்மிகு ஸ்ரீ அத்தனூர் அம்மன் திருக்கோவிலின் ஸ்தல வரலாறு

சங்க காலம் தொட்டு தொன்றுதொட்டு பக்தர்களால் வழிபடப்படும் புனித தாய்க்கோவில்

ஸ்தல விருச்சம்: வேம்பு
கோவில் பரப்பு: 5 ஏக்கர் 72 சென்ட் (சர்வே எண் 142)
ராஜகோபுரம்: 66 அடி உயரம் (5 நிலை)
கற்பகிரக கோபுரம்: 35 அடி (3 நிலை)
தினசரி: 3 கால பூஜைகள்

அமைவிடம் & தாய்க்கோவில் சிறப்பு

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், அத்தனூர் கிராமம் — மங்கள நகரமாம் சேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 16 கி.மீ தொலைவில் கிழக்கே போதி மலை, கள்ளார்மலை, மேற்கே சிந்தாமணி மலை, வடக்கே சஞ்சீவிராயன் மலை, தெற்கே அலவாய்மலை என்னும் சிவன் மலை இதனை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் எழில்மிகு சித்தர்மலைச் சாரலில் அருள்மிகு ஸ்ரீ அத்தனூர் அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான இடங்களில் அத்தனூர் அம்மன் கோவில்கள் இருந்தாலும்,

அத்தனூரிலேயே அமைந்துள்ள இக்கோவிலே தாய்க்கோவில் (மூலக்கோவில்)

என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்கோவிலின் பரப்பளவு: நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், அத்தனூர் ஆயிபாளையம் கிராமம்

சர்வே எண் 142-ல் 5 ஏக்கர் 72 சென்ட்

பரப்பளவு கொண்டது.

இக்கோவிலின் உபகோவில்கள்

  • 1) அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில் — அருள்மிகு ஸ்ரீ அத்தனூர் அம்மன் கோவில் வளாகத்திலேயே அமைந்துள்ளது.
  • 2) அருள்மிகு சஞ்சீவிராய பெருமாள் திருக்கோயில் — திருக்கோவிலின் அருகாமையில் உள்ள எழில்மிகு மஞ்சக்கல் மலைமீது அமைந்துள்ளது.

திருக்கோவில் காலம்

சங்க காலத்தில் கொல்லிமலைப் பகுதியை ஆண்ட, கடை ஏழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த, வல்வில் ஓரி மன்னன் வழிபட்ட புண்ணிய ஸ்தலம் ஆகும். இக்கோவில் ஒரு முக்கியமான பிரார்த்தனை ஸ்தலமாகும்.

பூஜைக்காலம் (தினசரி 3 கால பூஜைகள்)

காலை 7.30
காலை பூஜை காலை பூஜையில் அம்மனை தரிசனம் செய்தால் தீவினைகள் யாவும் நீங்கும்.
பகல் 12.00
உச்சிக்கால பூஜை உச்சிக்கால பூஜையில் தரிசனம் செய்தால் வேண்டியதும் முழுவதும் நிறைவேறும்.
மாலை 6.00
சாயரட்சை பூஜை தினந்தோறும் மாலை பூஜையில் அம்மனை தரிசித்தால் செய்த வினைகள் அனைத்தும் அகலும்.

உபசன்னதிகள் & சிற்ப அமைப்புகள்

கருவறையில் அருள்மிகு அத்தனூர் அம்மன் வடக்கு முகமாக வீற்றிருக்கிறாள். அர்த்த மண்டபத்தில் அம்மனின் பூஜைப்பொருட்கள் வைக்கப்படும். அர்த்த மண்டபத்தின் தென்கிழக்கு மூலையில் விநாயகரும், மேற்குபுறம் உற்சவமூர்த்தியும் வைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலின் இருபுறமும் கம்பீரமான துவார பாலகர் மற்றும் துவார பாலகி அமைந்துள்ளார்கள்.

மகாமண்டபத்தில் அம்மனின் எதிர்ப்புறம் காளை வாகனம், பாதம் கொண்ட தூரிக்கல், கொடி மரம், பலிபீடம் மற்றும் பாச்சலான், செம்பராயன், துலக்கண்ணன், ஆலத்தூரான் என்ற 4 வகையான கல்குதிரைகளும், பிரமாண்டமான கல்நந்தியும் கல் குதிரையும் அமைந்துள்ளன.

கருவறை பின்புறம் ஆதிமூலவர் சன்னதி (வடக்கு), கன்னிமார் சன்னதி, முன்னோர்கள் சன்னதி, தென்மேற்கில் ஊருதி விநாயகர் கோவில் (கிழக்கு), மேற்கில் ஸ்ரீ சர்வேஸ்வரர் சுவாமி சன்னதி, தென்கிழக்கில் மடப்பள்ளி, வடகிழக்கில் நவகிரகங்கள் அமைந்துள்ளன.

ராஜகோபுர நுழைவாயில் எதிர்புறம் அத்தாயி சன்னதி (வடக்கு), வடமேற்கில் உரும்பிக்காரன் சன்னதி, முத்து முனியப்பன் கோவில், மகாமுனி & ராஜமுனி சன்னதிகள் அமைந்துள்ளன.

ஸ்தலம் சிறப்பு (7 மாபெரும் சிறப்புகள்)

  • 1 வல்வில் ஓரி மன்னன் வழிபட்ட புண்ணிய ஸ்தலம்
  • 2 ஊமை, செவிடு போக்கும் சக்தியுடைய ஸ்தலம்
  • 3 தீராத வியாதிகளையும் தீர்த்து வைக்கும் ஸ்தலம்
  • 4 பேய் பிசாசுகளை அகற்றும் தெய்வ ஸ்தலம்
  • 5 மலடு நீக்கி மகப்பேறு அளிக்கும் வரப்பிரசாதி ஸ்தலம்
  • 6 கால்நடைகளுக்கு ஒரு நோய் என்றால் கண் கொண்டு போக்கும் மாகாளி ஸ்தலம்
  • 7 எந்த இடையூறுகளையும் தகர்த்து எறியும் அம்மன் ஸ்தலம்

அம்மனின் சிறப்பு (பூ வாக்கு & தூரி வழிபாடு)

சிவப்பு பூ

திருமண காரியங்கள், நிலங்கள் வாங்குதல் மற்றும் விற்றல் இவைகளுக்கு சிவப்பு பூ வந்தால் காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

வெள்ளை பூ → சிவப்பு பூ

பிணி நீங்குவது, தொழில் தொடங்குதல் மற்றும் வழக்கு போன்ற காரியங்களுக்கு வெள்ளை பூ வந்து சிவப்பு வந்தால் காரியம் சித்தியடையும்.

உபசன்னதி முத்து முனியப்பனை வேல், விலங்கு கொண்டு வழிபட்டால் பில்லி, சூனியம், காத்து, கருப்பு விலகி விடும்.

பாதிக்கப்பட்டவர் கிழக்கு வாசலில் நுழைந்து அம்மன் பாதம் வைக்கப்பட்ட தூரியை ஆட்டி வடக்கு வாசலில் வந்தால் நியாயம் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

நிர்வாக முறைகள்

இக்கோவிலை நிர்வாகம் செய்ய ஐந்து தர்மகர்த்தாக்கள் நியமிக்கப்படுகிறார்கள்:

  • 1) செங்குந்த முதலியார் சமூகம் — 1 தர்மகர்த்தா
  • 2) விழியன்குல நாட்டு கவுண்டர்கள் — 1 தர்மகர்த்தா
  • 3) எட்டுபட்டி கிராம வெள்ளாள கவுண்டர்கள் — 2 தர்மகர்த்தாக்கள்
  • 4) பிற சமூகத்தினர் — 1 தர்மகர்த்தா

அம்மன் சன்னதிக்குள் உயிர் பலிகள் கிடையாது. முத்து முனியப்பன், ராஜமுனி, மகா முனிக்கு மட்டுமே அசைவ பூஜைகள் நடைபெறும்.

வழிபாட்டு முறைகள் & பாரம்பரிய உரிமைகள்

கிழக்கு வாசலில் நுழைந்து அம்மனை வழிபட்டு வடக்கு வாசலில் வெளியே வந்து அத்தாயி அம்மனை வணங்குவது வழக்கம்.

தேர்திருவிழா கொடி ஏற்றத்துக்கு சேலை கொடுப்பது, தேருக்கு சேலை கொடுப்பது, உற்சவ மூர்த்தியை தூக்கி வருவது அத்தனூர் செங்குந்த முதலியார்களின் பரம்பரை உரிமை.

தேர் உலாவந்த பின் இரு தட்டுகளில் தீபாராதனை காட்டப்பட்டு, ஒரு தட்டு பிரசாதம் உள்ளூர் வெள்ளாளக் கவுண்டர்களுக்கும், மற்றொரு தட்டு விழியன்குல நாட்டுக் கவுண்டர்களுக்கும் வழங்கப்படுகிறது. அருந்ததியர்கள் கிழக்கு வாசலுக்கும், ஆதிதிராவிடர்கள் வடக்கு வாசலுக்கும் பந்தல் போடுவதும், மண்டடையார்கள் கிராமசாந்தி செய்வதும், தேர் ஆசாரிகள் தேர் ஓட்டுவதும் தொன்றுதொட்டு நடைபெறும் வழக்கமாகும்.

அத்தனூர் பெயர் காரணமும் அம்மன் உருவான ஸ்தல வரலாறும்

அத்தன் என்றால் சிவன். அத்தன் விரும்பிய ஊர் அத்தனூர் என்றாயிற்று. இத்திருக்கோவில் அமைந்த இடம் முற்காலத்தில் ஊஞ்ச வனமாக இருந்தது. பஞ்ச காலத்தில் இடம் பெயர்ந்த ஒரு கூட்டத்தில் பெண் வைத்திருந்த கூடையில் ஒரு குழவிக் கல் இருந்தது. அதை எறிந்தும் மீண்டும் கூடையில் வந்த விசித்திரத்தைக் கண்டு அத்தனூர் மஞ்சக்கல் அடிவாரத்தில் தங்கியபோது, கனவில் குலதெய்வமாக வெளிப்பட்டது.

மறுநாள் அக்கல்லை ஊஞ்ச வனத்தில் நட்டு வழிபடத் தொடங்கினர். அங்கு மேய்ந்த பசு மாடு ஒன்று புற்று கண் அருகில் சென்று தானாகவே பால் சுரந்த உண்மையைக் கண்டு ஊர் மக்கள் ஒன்று கூடி சிறிய கோவில் கட்டி வழிபட தொடங்கினர். மூலவராக இருந்த உக்ரகாளியம்மனே தற்போது காட்சி தரும் பத்ரகாளியம்மன் ஆகும்.

பத்ரகாளியம்மன் வேட்டைக்குச் சென்றபோது உரும்பிக்காரன் இசையில் மயங்கி ஆணையை மீறி வெளியே வந்த அத்தாயி அம்மனை மதில்களுக்கு வெளியே காவல் தெய்வமாக நிறுத்திய வரலாறும், உரும்பிக்காரன் கல்லான கதையும் செவி வழி வந்த செய்தியாகக் கூறப்படுகிறது.

இத்திருக்கோவிலில் முக்கிய திருவிழாக்கள்

அருள்மிகு ஸ்ரீ அத்தனூர் அம்மன் திருக்கோவிலின் மாபெரும் திருவிழாக்கள் மற்றும் சிறப்புகள்

ஐப்பசி பொங்கல் பண்டிகை

ஐப்பசி மாதத்தில் அம்மனுக்கு பொங்கல் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும்.

புரட்டாசி 3-ம் சனிக்கிழமை: மலை இறங்குதல் & சேர்வை

புரட்டாசி 3-ம் சனிக்கிழமை சஞ்சீவிராய பெருமாள் சுவாமி மலை இறங்கி 1 வாரம் சேர்வை உலா நடைபெறும்.

புரட்டாசி 4 & 5-ம் சனிக்கிழமைகள்

4-ம் சனிக்கிழமை பெருமாள் சுவாமி மலை ஏறுதலும், 5-ம் சனிக்கிழமை அம்மன் கோவிலில் சிறப்பு வைத்தலும் நடைபெறும்.

பூச்சாட்டுதல் & சர்கார்தோட்டி தண்டோரா

புதன்கிழமை அரண்மனை சாவடியில் எட்டுபட்டி மக்களுடன் பூச்சாட்டுதல் நடைபெற்று தண்டோரா மூலம் அறிவிக்கப்படும்.

தினசரி பூஜைகள் & சிறப்பு அபிஷேகம்

எட்டுபட்டி விநாயகர் ஆலயங்களில் தினசரி மாலையில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

பொங்கல் திருவிழா நாள் நிகழ்வுகள்

காலை 5:00 AM
அபிஷேகம் & பெரும் பொங்கல்

காலை 5 மணிக்கு கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சார்பாக அபிஷேகம் மற்றும் பெரும் பொங்கல் வைக்கப்படும்.

பகல் 2:00 PM
மாபெரும் வேட வண்டி ஊர்வலம் (வண்டி வேடிக்கை)

செங்குந்த முதலியார் சமூகம் சார்பாக பெரியபாவடி ராஜகணபதி கோவிலில் இருந்து மாபெரும் அலங்கார வண்டி ஊர்வலம் நடைபெறும்.

மறுநாள் சனிக்கிழமை
மஞ்சள் நீராட்டு விழா

செங்குந்த முதலியார் சமூகத்தினரால் மஞ்சள் நீராட்டு விழா சிறப்பாக நடைபெறும்.

சித்திரைத் தேர் திருவிழா

பங்குனி உத்திரத்தில் துவங்கி 15 நாட்கள் விமரிசையாக நடைபெறும் அருள்மிகு ஸ்ரீ அத்தனூர் அம்மன் சித்திரைத் தேர் திருவிழா.

1

கால்கோள் விழா (ஊசி கால்) & கிராம சாந்தி

பங்குனி உத்திர திருநாளில் கால்கோள் விழா நடைபெறும். 6-ம் நாள் கிராம சாந்தி நடைபெறும்.

2

கொடியேற்றம் (7-ம் நாள் காலை)

7-ம் நாள் காலை அத்தனூர் செங்குந்தர் முதலியார் சமூகத்தினரால் கொடியேற்றம் நடைபெறும்.

6 நாட்கள் மண்டப கட்டளைகள் & அம்மன் வாகன ஊர்வலம் (இரவு 9 மணிக்கு மேல்)

முதல் நாள்
அத்தனூர் செங்குந்தர் முதலியார்கள்

குதிரை வாகனம்

இரண்டாம் நாள்
இராசிபுரம் நாட்டு கவுண்டர் விழியன் குல சமுதாயத்தினர்

சிம்ம வாகனம்

மூன்றாம் நாள்
திருச்செங்கோடு பயிரன் குல கொங்கு வெள்ளாள கவுண்டர்கள்

காமதேனு வாகனம்

நான்காம் நாள்
அத்தனூர் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள்

பூத வாகனம்

ஐந்தாம் நாள்
கல்லாங்குளம் ஸ்ரீ சுவாமியார் (குருக்கள்)

பல்லக்கு வாகனம்

ஆறாம் நாள்
மல்லூர் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள்

அன்ன வாகனம்

முதல் ஆறு மண்டப கட்டளைகள் முறையே கொடியேற்றிய நாளிலிருந்து 7-ம் நாள் முதல் 12-ம் நாள் வரை நடைபெறும்.

13-ம் நாள்: திருக்கல்யாணம் & திருத்தேர் வடம் பிடித்தல்

13-ம் நாள் ரேவதி நட்சத்திரத்தில் காலை அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்ற பின்பு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருள்வார்.

மாலை 4 மணிக்கு திருத்தேர் மீண்டும் வடம் பிடிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களிப்பார்கள்.

பாரம்பரிய சடங்குகள் & நிலை சேருதல்:

வடக்கு தலைவாசலில் தேர் சேரும்போது உரும்பிகாரன் சன்னதியில் ஆட்டு குட்டி பலியிட்டு பூசாரிகள் தீர்த்தம் தெளிப்பார்கள். தேவேந்திர குல வேளாளர்கள் வழிபாட்டுச் சடங்கு செய்து 3 கற்களைக் குழியில் இடுவார்கள்.

அதன்பின் தேர் பழைய இடத்திற்கு நிலை சேர்ந்து உற்சவ மூர்த்திக்கு மகா பூஜை நடைபெறும்.

14

14-ம் நாள்: புஷ்ப பல்லக்கு & வான வேடிக்கை

14-ம் நாள் இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் (சத்தாபரணம்) வலம் வந்து வான வேடிக்கை நடைபெறும்.

15

15-ம் நாள்: வசந்த உற்சவம் & மஞ்சள் நீராட்டம்

15-ம் நாள் அம்மன் வசந்த உற்சவம் அவரோகணம் செய்து மஞ்சள் நீராட்டம் விமரிசையாக நடைபெறும்.

எட்டுபட்டி கிராமங்கள் (8 Patti Villages)

அருள்மிகு ஸ்ரீ அத்தனூர் அம்மனை குலதெய்வமாகவும் இஷ்டதெய்வமாகவும் வழிபடும் எட்டுபட்டி கிராம மக்கள்:

1. அத்தனூர் (Athanur)
2. அத்தனூர் புதூர் (Athanur Pudur)
3. ஆயிபாளையம் (Ayipalayam)
4. ஆலாங்காட்டு புதூர் (Alangattu Pudur)
5. தட்டாங்குட்டை புதூர் (Thattanguttai Pudur)
6. உடுப்பத்தான் புதூர் (Udupathan Pudur)
7. மூணுமூலக்காடு (Moonumoolakkadu)
8. விநாயகபுரம் (Vinayagapuram)

📍 கிராம Google வரைபடம்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டத்தில் அத்தனூர் கிராமம் அமைந்துள்ளது.

எங்கள் குழுவை தொடர்பு கொள்ளுங்கள்